Waqtuloohum haisu saqif tumoohum wa akhrijoohum min haisu akhrajookum; walfitnatu ashaddu minal qatl; wa laa tuqaatiloohum 'indal Majidil Haraami hattaa yaqaatilookum feehi fa in qaatalookum faqtuloohum; kazaalika jazaaa'ul kaafireen
ஆகவே (உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்ட) அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையை விட மிகக் கொடியது. ஆனால் (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிய முற்படும் வரையில் நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். அந்த நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி இதுவே!
Fa ini-ntahaw fa innal laaha Ghafoorur Raheem
(இதன்) பின்னும் அவர்கள் (உங்களை எதிர்த்து போர் புரியாது) விலகிக்கொண்டால் (நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.
Wa qaatiloohum hatta laa takoona fitnatunw wa yakoonad deenu lillaahi fa-inin tahaw falaa 'udwaana illaa 'alaz zaalimeen
அன்றி, (இஸ்லாமிற்கு எதிராக செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரையில் அவர்களை எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு உண்டு). அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறக்கூடாது.
Ash Shahrul Haraamu bish Shahril Haraami wal hurumaatu qisaas; famani'tadaa 'alaikum fa'tadoo 'alaihi bimsisli ma'tadaa 'alaikum; wattaqul laaha wa'lamooo annal laaha ma'al muttaqeen
(போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும். ஆகவே, சிறப்புகளுக்கு(ச் சமமான) ஈடு உண்டு. ஆதலால், எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறி (அம்மாதங்களில் போருக்கு) வந்தால், அவர் வரம்பு மீறிய விதமே நீங்களும் அவர் மீது வரம்புமீறி (போருக்கு)ச் செல்லுங்கள். ஆனால், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து (அம்மாதங்களில் போரை ஆரம்பம் செய்யாது இருந்து) கொள்ளுங்கள். அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
Wa anfiqoo fee sabeelil laahi wa laa tulqoo bi aydeekum ilat tahlukati wa ahsinoo; innal laaha yuhibbul muhsineen
நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தாராளமாகச்) செலவு செய்யுங்கள். தவிர, (போர் சமயத்தில் செலவு செய்யாது) உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள். அன்றி (பிறருக்கு உதவியும்) நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கின்றான்.
Wa atimmul Hajja wal Umarata lillaah; fain uhsirtum famas taisara minal hadyi walaa tahliqoo ru'oosakum hatta yablughal hadyu mahillah; faman kaana minkum mareedan aw biheee azam mir raasihee fafidyatum min Siyaamin aw sadaqatin aw nusuk; fa izaaa amintum faman tamatta'a bil 'Umrati ilal Hajji famastaisara minal hady; famal lam yajid fa Siyaamu salaasti ayyaamin fil Hajji wa sab'atin izaa raja'tum; tilka 'asharatun kaamilah; zaalika limal lam yakun ahluhoo haadiril Masjidil Haraam; wattaqul laaha wa'lamoo annal laaha shadeedul'iqaab
அல்லாஹ்வுக்காக (ஆரம்பம் செய்த) ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் முழுமையாக்குங்கள். ஆனால் (மக்கா செல்ல முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்பட்டு (ஹஜ்ஜை முழுமையாக்க முடியா)விட்டால் "ஹத்யு" (என்னும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை)களில் (உங்களுக்குச்) சாத்தியமானவை பரிகாரமாகும். தவிர, அந்த ஹத்யுக்கள் தாம் செல்ல வேண்டிய (மக்காவிலுள்ள ஹரம் என்னும்) இடத்தை அடையும் வரையில் நீங்கள் உங்கள் தலைமுடியைச் சிரைத்துக் கொள்ளாதீர்கள். ஆயினும், (இஹ்ராம் கட்டிய) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது தலையில் (பேன், புண், வலி ஆகியவைகளால்) இடையூறு உள்ளவராகவோ இருந்து (முடியிறக்கிக் கொண்டு) விட்டால், அதற்குப் பரிகாரமாக (அவர் மூன்று) நோன்புகள் நோற்கவும் அல்லது (ஆறு ஏழைகளுக்கு உணவு) தானம் செய்யவும். அல்லது (ஓர் ஆடு) குர்பானி கொடுக்கவும். அன்றி (இஹ்ராம் அணிந்த) நீங்கள் எவ்விதத் தடையுமில்லாது (ஹஜ்ஜு செய்ய) வசதி பெற்றவர்களாக இருந்து (மக்கா சென்ற பின் உங்களில்) எவரேனும் உம்ராவை (மாத்திரம்) செய்துவிட்டு ஹஜ்ஜுக்கு முன்னதாகவே (ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் (அதற்குப்) பரிகாரமாக ஹத்யுக்களில் இயன்றதைக் கொடுக்கவும். ஆனால், (ஹத்யுக்களில் எதையுமே) பெற்றுக் கொள்ளாதவர், ஹஜ்ஜுடைய காலத்தில் மூன்றும் (தன் இருப்பிடம்) திரும்பியபின் ஏழும், ஆக முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்கவும். (தடுக்கப்பட்ட சுகத்தை அனுபவிக்கும்) இ(வ்வுரிமையான)து எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்) குடியிருக்கவில்லையோ அவருக்குத்தான். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (குற்றவாளிகளை) வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
Al-Hajju ashhurum ma'-loomaat; faman farada feeinnal hajja falaa rafasa wa laa fusooqa wa laa jidaala fil Hajj; wa maa taf'aloo min khairiny ya'lamhul laah; wa tazawwadoo fa inna khairaz zaadit taqwaa; wattaqooni yaaa ulil albaab
ஹஜ்ஜு (அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜு ஆகிய) மாதங்களில்தான். ஆகவே அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தன்மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜு (மாதத்தின் பத்தாம் தேதி) வரையில் வீடு கூடுதல், தீச்சொல் பேசுதல், சச்சரவு செய்துகொள்ளுதல் கூடாது. நீங்கள் என்ன நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறி(ந்து அதற்குரிய கூலி தரு)வான். தவிர, (ஹஜ்ஜுடைய பயணத்திற்கு வேண்டிய) உணவுகளை (முன்னதாகவே) தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாக (நீங்கள்) தயார்படுத்திக் கொள்ள வேண்டியவை களில் எல்லாம் மிக மேலானது இறை அச்சத்தைத்தான். ஆதலால் அறிவாளிகளே! நீங்கள் (குறிப்பாக ஹஜ்ஜுடைய காலத்தில்) எனக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்.
Laisa 'alaikum junaahun an tabtaghoo fad lam mir rabbikum; fa izaaa afadtum min 'Arafaatin fazkurul laaha 'indal-Mash'aril Haraami waz kuroohu kamaa hadaakum wa in kuntum min qablihee laminad daaaleen
(ஹஜ்ஜு பயணத்தின்போது) நீங்கள் (தொழில் செய்து) உங்கள் இறைவனுடைய அருளை(க் கொண்டு கிடைக்கும் லாபத்தை)த் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. அன்றி, (ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பினால் "மஷ்அருல் ஹராம்" என்னும் இடத்தில் அல்லாஹ்வைத் திக்ரு செய்யுங்கள். தவிர, நீங்கள் இதற்கு முன் வழி தவறியவர்களாக இருந்தபொழுது உங்களுக்கு அவன் நேரான வழியை அறிவித்ததற்காக பின்னும் அவனைத் "திக்ரு" செய்யுங்கள்.
Summa afeedoo min haisu afaadan naasu wastagh firullaah; innnal laaha Ghafoo rur-Raheem
பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற ("முஸ்தலிபா" என்னும்) இடத்திலிருந்து நீங்களும் ("மினா"வுக்குத்) திரும்பிவிடுங்கள். மேலும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.
Fa-izan qadaitum manaa sikakum fazkurul laaha kazikrikum aabaaa'akum aw ashadda zikraa; faminannaasi mai yaqoolu Rabbanaaa aatinaa fiddunyaa wa maa lahoo fil Aakhirati min khalaaq
(ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள் உங்களுடைய (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்தமிட்டு பெருமையாகக்) கூறி வந்ததைப்போல் அல்லது அதனைவிட அதிகமாக அல்லாஹ்வைத் "திக்ரு" (செய்து உங்களுக்கு வேண்டியவைகளையும் அவனிடம் கேட்டுப் பிரார்த்தனை) செய்யுங்கள். (பிரார்த்தனையில்) "எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவைகளை எல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக!" என்று கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. ஆனால், இத்தகையவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை.